

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பழையவண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன், 3-வது தெருவில் காலணி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் பூட்டியிருந்த அந்த கடை மீது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பெட்ரோல்குண்டு வீசி விட்டு தப்பியது. கடை பூட்டியிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்துஅறிந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாககடையின் அருகில் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கினர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு தெரிவித்ததாவது: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (19), ராயபுரம் மஸ்தான் தர்கா தெருவைச் சேர்ந்தபூபாலன் (23) மற்றும் 17 வயதுடைய சிறார்கள் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளி வெள்ளை நாகராஜ் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட காலணி கடை அருகில் உள்ள துணிக்கடையில் துணிகள் எடுத்து விட்டு, பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை மிரட்டிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து வெள்ளை நாகராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விக்னேஷை போலீஸார் தேடிவந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்தவிக்னேஷ் தனது மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டை துணிக்கடையில் வீசியபோது அது தவறி பக்கத்தில் இருந்த காலணி கடையில் விழுந்து வெடித்துள்ளது. துணிக்கடை உரிமையாளரைப் பழிவாங்கவே இவ்வாறு பெட்ரோல் குண்டை வீசினேன் என கைதான விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.