Published : 31 May 2024 06:12 AM
Last Updated : 31 May 2024 06:12 AM
சென்னை: கோயம்பேட்டில் பீர் பாட்டிலால் தாக்கி உணவக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்தவரை மாற்றி எழுப்பியதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(48). இவர் கோயம்பேடு சந்தையில் தங்கி, அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு கோயம்பேடு சந்தையில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நெற்குன்றத்தைச் சேர்ந்த கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் சக்தி குமார்(23) என்பவர் தனது நண்பரை எழுப்புவதற்கு பதிலாக மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த சேகரை எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், சக்தி குமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனால், கோபம் அடைந்த அவர், அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து சேகரின் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பினார். சேகரின் அலறல் சத்தம் கேட்டுஅங்கு படுத்திருந்த சக தொழிலாளிகள் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆய்வாளர் பரணிதரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து சேகரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தலைமறைவாக இருந்தசக்தி குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் சம்பவத்தன்று மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT