உணவு பரிமாறாததால் ஆத்திரம்: கர்நாடகாவில் மனைவியின் தலையை வெட்டி, தோலை உரித்த கணவன்

உணவு பரிமாறாததால் ஆத்திரம்: கர்நாடகாவில் மனைவியின் தலையை வெட்டி, தோலை உரித்த கணவன்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி உணவு பரிமாறாத கோபத்தில் தலையை வெட்டிக் கொன்று, தோலை உரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தும்கூரைச் சேர்ந்தவர் சிவராமா. அரவை மில் ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா. கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள் (மே 27) அன்று இரவு, வழக்கம்போல சிவராமாவுக்கும் அவரது மனைவி புஷ்பலதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பலதா, தனது கணவர் சிவராமாவுக்கு உணவு பரிமாற மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு அதிகமாகியுள்ளது.

ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சிவராமா கத்தியால் புஷ்பலதாவை குத்திக் கொன்றுள்ளார். இதனையடுத்து புஷ்பலதாவின் தலையை வெட்டி, அதன் பிறகு மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை வரை புஷ்பலதாவின் உடலில் இருந்து தோலை உரித்து எடுத்துள்ளார். பின்னர் நடந்த விஷயத்தை தனது வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிவராமாவை கைது செய்து, புஷ்பலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் நடந்த போது வீட்டின் அறையில் அந்த தம்பதியின் 8 வயது மகன் தூங்கிக் கொண்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in