Published : 30 May 2024 06:15 AM
Last Updated : 30 May 2024 06:15 AM
சென்னை: இரட்டிப்பு பணம் தருவதாக முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.3.89கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமதலைவர் மற்றும் அதன் நிர்வாகிகள் என 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடரங்க குப்தா (54). இவர் ‘ஸ்வர்ணதாரா’ என்ற பெயரில்நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த குழுமத்தில் முதலீடு செய்தால் அப்பணத்தை பல்வேறு நிறுவனங்களின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதாகவும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கம் உள்பட பல்வேறு மூலதனங்களில் முதலீடு செய்வதாகவும் அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
குறிப்பாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 சதவீத லாபத் தொகை வருடா வருடம் கொடுத்து 3 வருடம் முடிந்த பின்னர் முதலீடு செய்த முழுத் தொகையையும் திருப்பி தருவதாக உறுதி அளித்தது. ஆனால், உறுதி அளித்தபடி லாபத்தொகை கொடுக்காமலும், முதலீட்டு பணத்தை கூட திருப்பி தராமல் ரூ.3.89 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக 50-க் கும் மேற்பட்டோர் ஸ்வர்ணதாரா குழுமம் மீது புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் செந்தில் குமாரி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் பிரசிதா தீபா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டார். இதில், முதலீடு என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, இந்நிறுவன இயக்குநர்கள் டி.கே.ஹரிகரன் (58), வெங்கடரங்க குப்தா மனைவி விஜய ஸ்ரீகுப்தா (54), கவிதா சக்தி (49), பிரஷிதா குப்தா (29), ஜெயசந்தோஷ் (25), ஜெயவிக்னேஷ் (25) ஆகிய 7 பேரை கொரட்டூர் மற்றும் நொளம்பூரில் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் ரொக்கம், 44 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், 2 சொகுசு கார்கள், 2 லேப்டாப், 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT