சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை: வெளிநாட்டு விஐபிகளுக்கும் தொடர்பு?

சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை: வெளிநாட்டு விஐபிகளுக்கும் தொடர்பு?
Updated on
1 min read

சென்னை: சென்னையில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல், அச்சிறுமிகளுக்கு வெளிநாட்டு விஐபி-கள் மூலம் பாலியல் தொல்லைகளை அளித்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் சில தினங்களுக்கு முன் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர். கைதான ராமச்சந்திரனிடம் நடத்திய விசாரணையை அடுத்து சென்னையில் பள்ளி மாணவிகள், சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக தி.நகரைச் சேர்ந்த நதியா (37), அவருடைய சகோதரி சுமதி (40) மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என 8 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், பள்ளியில் படிக்கும் சிறுமிகளை குறிவைத்து பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி அந்தச் சிறுமிகளை தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொழிலில் இக்கும்பல் தள்ளி அதன் மூலம் வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும், ஒவ்வொரு சிறுமிக்கும் ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை கமிஷனாக பெற்றதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்திக் கொண்ட நபர்களின் பட்டியலை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார் சேகரித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுமிகளை பாலியல் கும்பல் வெளிநாட்டு விஐபிக்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மூலமும் பாலியல் தொல்லைகளை அளித்தார்களா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி இருக்கிறது போலீஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in