ஸ்ரீவில்லிபுத்தூர் முதியவர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது

கைதான ராம்குமார், காவல் ஆய்வாளர் சத்யசீலா.
கைதான ராம்குமார், காவல் ஆய்வாளர் சத்யசீலா.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் அடித்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் ராமர் (60). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (65) குடும்பத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலில் சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறினார். அதற்கு ராமர் எதிர்ப்புத் தெரிவித்ததால், இரு குடும்பத்துக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ராமசாமி, அவரது மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கற்கள் மற்றும் இரும்புக் கரண்டியால் தாக்கினர். இதில் காயமடைந்த ராமர், மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரில் வில்லிபுத்தூர் நகர்போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து இந்தவழக்கை கொலை வழக்காக மாற்றி, ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரைக் கைதுசெய்தனர். தலைமறைவான ராம்குமார் மற்றும் ஒரு பெண்ணைத் தேடி வந்த நிலையில் நேற்றுபெங்களூருவில் இருவரையும் கைது செய்தனர்.

இதில் ராம்குமாருடன் (36) கைதான பெண்சத்யசீலா (45) என்பதும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இவர் மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர்.

பணியிடை நீக்கம்: இதற்கிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சத்யசீலாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in