

சென்னை: முகவரி கேட்பதுபோல் நடித்து, மசாஜ் சென்டர் உட்பட இரு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வேளச்சேரி ஓராண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், தனது வீட்டின் முன்பகுதியில் பழைய இரும்புப் பொருட்கள் வாங்கும் காயலான் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 26-ம் தேதி காலை பெருங்குடி ரயில் நிலையம் எதிரில் உள்ள சேஷாத்திரபுரம் 1-வது தெருவில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த 2 நபர்கள் மணிகண்டனிடம் முகவரி கேட்பதுபோல நடித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம், செல்போனை பறித்துச் சென்றனர்.
மேலும், அதே நாளில் வேளச்சேரி 100 அடி சாலையில் இயங்கி வரும் மசாஜ் சென்டரில் 2 நபர்கள் நுழைந்து, மசாஜ் குறித்து விவரம் கேட்பது போல நடித்து, அங்கிருந்த மேலாளர் அல்பைஸ் மற்றும் மேற்பார்வையாளர் நைஜுஆகியோரை தாக்கி கத்தியைக்காட்டி மிரட்டி பணம், செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடங்களின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
2 வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த கொம்பையா (36), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த ஹெயின்ஜியோ (22) என்பது தெரியவந்தது.
குண்டர் தடுப்பு சட்டத்தில்... தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கொம்பையா மீது பாலியல் தொழில், வழிப்பறி உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதும், 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.