பட்டினப்பாக்கத்தில் விருந்துக்கு அழைத்து தொழிலதிபரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு: இளம்பெண் கைது

பட்டினப்பாக்கத்தில் விருந்துக்கு அழைத்து தொழிலதிபரை கடத்தி ரூ.50 லட்சம் பறிப்பு: இளம்பெண் கைது
Updated on
1 min read

சென்னை: பட்டினப்பாக்கத்தில் விருந்து நிகழ்ச்சிக்கு வருமாறு தொழிலதிபரை வரவழைத்து, கடத்தி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன். பர்மா பஜாரில் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஒரு புகார் அளித்தார்.

அதில், ‘சில நண்பர்கள் அழைத்ததின்பேரில் கடந்த 17-ம் தேதி பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூ இரண்டாவது தெருவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றேன். அங்கு காரில் இருந்து இறங்கியதும், ஒரு கும்பல் மற்றொரு காரில் என்னை கடத்திச் சென்று, மதுரவாயலில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது.

எனது நண்பர் மூலம் அந்த பணத்தை கொடுத்த பின்னர், அந்த கும்பல் என்னை விடுவித்தது. என்னை மிரட்டி பணம் பறித்த அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சோனியா என்ற இளம்பெண்ணை நேற்று கைது செய்தனர்.

மது பழக்கத்துக்கு அடிமை: பட்டதாரி பெண்ணான சோனியா, காதல் தோல்வியால் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, தடம் மாறி இரவுநேர பொழுதுபோக்கு மையத்துக்கு அடிக்கடி சென்றபோது, பணம் பறிக்கும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த கும்பலின் திட்டப்படியே ஜாவித் சைபுதீனிடம் நைசாக பேசி, அவரை சம்பவ இடத்துக்கு சோனியா வரவழைத்ததும், அங்கிருந்து கடத்திச் சென்று, மிரட்டி பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

கடத்தல் கும்பல் ரூ.50 லட்சத்தில் 5 சதவீதம் பங்கு தருகிறோம் என்று கூறி, சோனியாவுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார், கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in