Published : 29 May 2024 06:14 AM
Last Updated : 29 May 2024 06:14 AM
சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிதொகுப்பாளினி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் வசிக்கும் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், கோவையிலிருந்து வேலை தேடி சென்னை வந்தேன். தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிகிறேன். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புபாரிமுனையில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றேன். அப்போது, அந்த கோயில் அர்ச்சகராக இருந்தமண்ணடி, தம்புச்செட்டி தெருவைச் சேர்ந்த கார்த்திக் முனுசாமி (46) என்பவர் அறிமுகமானார்.
கோயிலுக்கு வரும்போது, அவருக்கு போன் செய்தால் பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி என்னுடன் பேசி வந்தார். கோயிலில் நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் காரில் என்னை அழைத்துக் கொண்டு எனது வீட்டில் இறக்கிவிட்டார். பின்னர், வீட்டுக்குள் வந்து கோயில்தீர்த்தம் என்று சொல்லி, பாட்டிலில் ஒன்றை கொடுத்தார். அதை குடித்ததும் நான் சுயநினைவை இழந்தேன். இதை பயன்படுத்தி என்னை வன்கொடுமை செய்துவிட்டார். பின்னர், வெளியே சொல்லிவிட வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்.
மிரட்டுகிறார்: மேலும், தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார். 2023பிப்ரவரியில் அவரால் நான் கர்ப்பமானேன். அதை கட்டாயப்படுத்தி கலைக்க வைத்தார். மேலும்,சிலரை விஐபி என அழைத்து வந்து அவர்களுடன் நெருக்கமாக இருக்க வலியுறுத்தியதால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. என்னை கொடுமைப்படுத்தினார். தற்போது என்னை தவிர்த்து விட்டார். நடந்தது எதையும் வெளியே சொல்ல கூடாது என மிரட்டுகிறார். அவர்என்னைபோல் 25-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்துள்ளார்.
எனவே, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து விருகம்பாக்கம் மகளிர் போலீஸார் கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர் தலைமறைவானார். அவர் வெளிநாடுக்கு தப்புவதை தடுக்க போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த காரத்திக் முனுசாமியை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தலைமை குருக்களிடம் விசாரணை: கைது செய்யப்பட்ட கார்த்திக் முனுசாமி பணிபுரிந்து வந்த கோயில், தனியார் அறக்கட்டளை நிர்வாகத்தின்கீழ் உள்ளது.தலைமை குருக்களாக இருக்கும், கார்த்திக் முனுசாமியின் உறவினர் காளிதாஸின் செல்வாக்கு காரணமாகவே, கார்த்திக் முனுசாமி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதனாலேயே, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அறக்கட்டளை நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது. காளிதாஸிடமும் போலீஸ் விசாரணை நடத்தியிருக்கிறது. புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைதாவார்கள் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT