

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்த போலீஸார், அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் முனுசாமி தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி கார்த்திக் முனுசாமிக்கு எதிராக புகார் அளித்த இளம்பெண் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், போலீஸில் பாலியல் புகார் அளித்ததால் கார்த்திக் முனுசாமி தனக்கு மிரட்டல் விடுத்துவருகிறார்.
இந்த வழக்கில் கார்த்திக்கை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. போலீஸார் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இம்மனு விசாரணைக்கு வரவுள்ளது.