உடுமலை: கூரை ஏறி பந்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம்
Updated on
1 min read

உடுமலை: உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவன் பந்தை எடுக்க கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம், கண்ணு செட்டியார் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் குருராஜ். எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபு (12). அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை மின்வாரியத்துக்கு சொந்தமான காலி இடத்தில் நண்பர்களுடன் பிரபு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து அங்குள்ள ஷெட் ஒன்றின் கூரை மீது விழுந்து விட்டது. பந்தை எடுப்பதற்காக கூரை மீது ஏறிய பிரபு உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

உடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் 80-90 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘சிறுவனின் உயிரிழப்பு துயரமான சம்பவம். பந்தை எடுப்பதற்காக ஷெட் மீது ஏறியபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயரழுத்த மின் பாதையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் புதர் மண்டிய இடங்கள் ஜேசிபி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சிறுவன் விபத்துக்குள்ளானபோது உடனிருந்த சிறுவர்கள் ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு மின்வாரிய ஊழியர்கள் சென்று பார்த்தபோது தான் விபத்து குறித்து தெரியவந்தது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in