சொகுசு கார் விபத்து: புனே சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.

அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான ‘Porsche Taycan’-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அந்த காரின் மதிப்பு ரூ.1 கோடி என தகவல்.

“புனே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அந்த சொகுசு காரை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப் பட்டிருந்தது. அப்போது பதிவு சார்ந்த சில கட்டணம் செலுத்தாத காரணத்தால் அந்த கட்டணத்தை செலுத்துமாறு உரிமையாளர் வசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வாகனம் பதிவுக்காக போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்படவில்லை.

ஆனாலும் அந்த வாகனம் தற்காலிக அடிப்படையில் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்துக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அனுமதி கர்நாடகாவில் பெறப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த கார் பெங்களூருவில் உள்ள டீலர் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்காலிக பதிவின் கீழ் உள்ள வாகனம் போக்குவரத்து அலுவலகம் மட்டுமே வந்து செல்ல முடியும்.

மேலும், இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது.

அதே போல் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்ட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது” என விவேக் பிமான்வார் தெரிவித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் கல்யாணி நகர் பகுதியில் சொகுசு காரை இயக்கி, இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், அடுத்த 15 மணி நேரங்களில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in