கல்பாக்கம் | துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை

கல்பாக்கம் | துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை
Updated on
1 min read

கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பேருந்தில் அலுவலகம் சென்றபோது, துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் நேற்று அதிகாலை அங்கிருந்து பேருந்தில் குடியிருப்பு மற்றும் தலைமை அலுவலகத்துக்குத் திரும்பி உள்ளனர்.

சதுரங்கப்பட்டினம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தில் துப்பாக்கி வெடித்துள்ளது. இதில், கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிகிரண்(37) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் மற்றும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் வந்து, ரவிகிரண் உடலை மீட்டு, கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, எஸ்பி.சாய் பிரனீத், சம்பவம் நேரிட்ட பேருந்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தொழில்நுட்பக் கோளாறால் துப்பாக்கி தானாக வெடித்ததா அல்லது மனஉளைச்சல் காரணமாக ரவிகிரண் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவருக்கு மனைவி அனுசா, மகள்கள் யாஷாஸ்வினி (9), ரித்திகா (5) உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in