

கோவை: கோவை - அன்னூர் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி பணம், 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து அன்னூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக நிர்வாகி. இவர், கார் வாட்டர் வாஷ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், புதியதாக இடம் வாங்குவதற்காக, ரூ.1.50 கோடி பணத்தை தனது வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்து வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயகுமார் இன்று (மே 18) வீட்டைப் பூட்டிவிட்டு, அன்னூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு இடம் வாங்குவது தொடர்பான ஆவண நடைமுறைகளை முதலில் முடித்துள்ளார். தொடர்ந்து பணம் எடுப்பதற்காக சொக்கம் பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு இன்று வந்தார்.
அப்போது பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவு திறந்து கிடந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் தான் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடி பத்திரமாக உள்ளதா என சரி பார்த்தார்.
ஆனால், பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டில் நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.1.50 கோடி பணம் மற்றும் 9 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயகுமார் அளித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள், தடயங்களை போலீஸார் சேகரித்தனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்மநபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நித்யா கூறும்போது, “வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் உள்ளிட்டவை திருட்டு போனதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.