

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், படாளத்தை அடுத்த புக்கத்துறை பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை திருச்சியில்இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிசென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ்(30) மற்றும் சென்னையைச் சேர்ந்த பிரவீன்(24), சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தனலட்சுமி (53) மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த படாளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற் கொண்டனர். இதில், பேருந்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அகற்றினர். இதனால், திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக படாளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்: இந்நிலையில், சாலை விபத்தில்உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.