

மதுரை: கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்தவர் யூடியூபர் சவுக்குசங்கர். இவர் மீது யூடியூப் சேனல் பேட்டியில், பெண் போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை மே 5-ல் கோவை போலீஸார் கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனையிட்ட போலீஸார், அங்கு கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், ஓட்டுனர் மீது பழனிசெட்டிபட்டி போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி செங்கலச்செல்வன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 22-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.