

வேலூர்: வாலாஜா அருகே சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
சென்னை அடுத்த சுங்குவாச்சரத்தில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் தினமும் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து மூலம் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி, தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து இன்று (வியாழக்கிழமை) காலை வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. வாலாஜா சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெயனர் லாரியின் பின்பக்கத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 18 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து நேரிட்டாக கூறப்படுகிறது. இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவர்கள் உதவி செய்ய வேண்டும் என மருத்துவர்ளுக்கு அறிவுறுத்தினார். இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.