

சென்னை: புழல் பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொளத்தூர் லட்சுமி அவென்யூ, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்தவர் அவினாஷ் என்ற இம்மானுவேல் (18). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புழல், ஒத்தைவாடை தெரு, ஜெய்பாலாஜி நகரிலுள்ள காலி மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கும்பல் அவினாஷை கொலை செய்துவிட்டு தப்பியது.
கொலை தொடர்பாக புழல் கங்காதரன் 3-வது தெருவை சேர்ந்த இளம்பருதி (20), அவரது நண்பர்கள் செங்குன்றம் சந்தோஷ் குமார் (21), புழல் காவாங்கரை சூர்யா (24), அதே பகுதி லோகேஷ் (20) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், கைதான இளம்பருதிக்கு 17 வயதில் தங்கை இருந்துள்ளார். அவருக்கும் கொலை செய்யப்பட்ட அவினாஷூக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அண்ணன் இளம்பருதி அவினாஷை அரிவாளால் தாக்கியுள்ளார்.
இந்த வழக்கில் இளம்பருதி கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். இதையடுத்து, இளம்பருதி தந்தை தனது மகளை செங்குன்றம் அடுத்து காரனோடையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து தினமும் பள்ளிக்கு சென்று வந்த அந்த மாணவி, அண்மையில் பள்ளி முடிந்து தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தை பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த இளம்பருதி, அவினாஷால்தான் தங்கை இறந்தார், தந்தை பலத்த காயம் அடைந்தார் என ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த முன்விரோதத்தால்தான் அவினாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.