

கூடுவாஞ்சேரி: வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் வேளச்சேரியில் உள்ள ஹிட்டாச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் (29) தலைமையில், மது பிரசாத் (22), ஓட்டுநர் மகாலிங்கம் (24) மற்றும் இவர்களுடன் சென்ற குரூப் 3 தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர் குணசேகரன் (45) ஆகியோர்நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.
பணத்துடன் தலைமறைவு: இறுதியாக ஊரப்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப ராஜசேகர் மற்றும் மது பிரசாத் சென்றபோது ஓட்டுநர் தன் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை விட்டுவிட்டு சிறிது தூரம் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாதுகாவலர் குணசேகரன் ரூ.37 லட்சம் உள்ள ஒரு பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தலைமறைவானார்.
ஓட்டுநர் மகாலிங்கம் மற்றும் பணம் நிரப்பச் சென்ற ராஜசேகர் மற்றும் மது பிரகாஷ் வந்து பார்த்தபோது குணசேகரனைக் காணவில்லை சந்தேகமடைந்த மூவரும் பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.37 லட்சம் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டனர்.
திருவான்மியூரில் பிடிபட்டார்: இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, திருவான்மியூர் பகுதியில் பதுங்கியிருந்த குணசேகரனை 8 மணி நேரத்தில், பணப்பையுடன் பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.