

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக இறந்த வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தனிப்படை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி கண்ணன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு விசாரணையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த வழக்கில் துப்பு துலக்க அமைக்கப்பட்டுள்ள 10 தனிப்படை அதிகாரிகளுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை மேற்கொண்டார்.
4 மணி நேரத்துக்கு மேல்...: 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கை விசாரிக்கும் தனிப்படை அதிகாரிகள், தடய அறிவியல் குழுவினர், சைபர் கிரைம் போலீஸார், அறிவியல் பூர்வ விசாரணை குழுவினருடன், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பா. மூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு விசாரணையில் இதுவரை கிடைத்த தகவல்கள், முக்கிய ஆதாரங்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரங்கள், பரிசோதனை முடிவுகள், டிஎன்ஏ பரிசோதனை, ஜெயக்குமார் எழுதிய 2 கடிதங்களில் அவரது கையெழுத்து உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வு அறிக்கை உள்ளிட்டவற்றை தனிப்படை போலீஸார் எதிர்பார்த்துள்ளனர். இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் போலீஸார் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.