

திருவாரூர்: திருவாரூர் அருகே, குடவாசல் பகுதியில் பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாருர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள ஒகை பாலம் அருகில், கடந்த 8-ம் தேதி இரவு, கானூரை சேர்ந்த பாஜக உறுப்பினரும், முன்னாள் பாஜக மாவட்ட விவசாய பிரிவு தலைவருமான மதுசூதனனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். தற்போது மதசூதனன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவரது மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் பேரில், குடவாசல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர். இதையடுத்து நேற்று (10-ம் தேதி) கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின்படி, கட்சி முன்விரோதம் காரணமாக, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் இந்தச் சம்பவத்துக்கு தூண்டுகோலாக இருந்ததாகவும், மேலும் இச்சம்பவத்தில் திருவிடைமருதூர் பண்டரீகபுரத்தைச் சேர்ந்த பேபி (எ) விஐய், கொரநாட்டு சுருப்பூரைச் சேர்ந்த தீனா (எ) தீனதயாளன், அதே பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் இரண்டு நபர்கள் உட்பட 12 பேர் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன் இனறு அதிகாலை கோவையில் தலைமறைவாக இருந்தபோது, தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.