

சென்னை: போதைப் பொருள் வழக்கில் காவல் துறை அமைச்சுப் பணியாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை யானைக்கவுனி காவல் நிலையத்தில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றியவர் (டேட்டா ஆபரேட்டர்) அரவிந்தன் (28). இவர் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அண்ணாநகர் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் சம்பந்தப்பட்ட அமைச்சுப் பணியாளரை உன்னிப்பாக கண்காணித்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கிருந்து 3 கிராம் எடையில் கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரவிந்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், வியாசர்பாடியைச் சேர்ந்த நரேஷ் ( 25) என்பவரிடம் இருந்து கோகைன் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் டிரேடிங்: இதனை அடுத்து தனிப்படை போலீஸார் நரேஷ் வீட்டில் சோதனை நடத்தி 5 கிராம் கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையின் ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வரும் நரேஷ் தனக்கு தெரிந்த போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து கோகைன் வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களது பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.