

சென்னை: சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி (58). இவர் நேற்று முன்தினம் (9-ம் தேதி) வீட்டில் கழுத்துஅறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். தகவல் அறிந்து திருவான்மியூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து பொன்னிஉடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கப்பட்டது. இதில், கொலைதொடர்பாக பெசன்ட் நகர் பகுதியில்உள்ள திடீர் நகர் விக்னேஷ் (20), அதே பகுதி தீனா (21) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சிறுவன், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், நண்பர்களான விக்னேஷ் மற்றும் தீனா ஆகியோரை வரவழைத்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். மேலும் தான் காதலிக்கும் பெண்ணையும் வீட்டுக்கு வரவழைத்து பேசிப் பழகி வந்துள்ளார்.
இதைக் கவனித்த அருகில் வசிக்கும் பொன்னி, சிறுவனின் நடத்தையை அவனது பெற்றோரிடம் கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது நண்பர்களான விக்னேஷ் மற்றும் தீனா ஆகியோருடன் பொன்னியின் வீட்டுக்குச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசா ரணை நடக்கிறது.