

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது அருந்திய பயணி, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 132 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.
விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன் (30) என்பவர், மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து தண்ணீர் கலந்து குடிக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் மது குடிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர் மது அருந்திக் கொண்டே இருந்துள்ளார்.
இதையடுத்து, விமான பணிப் பெண்களிடம் பயணிகள் புகார் அளித்தனர். அவரை கடுமையாகக் கண்டித்த பணிப்பெண்கள், அவரிடம் இருந்து மது பாட்டிலை பறிமுதல் செய்தனர். `சர்வதேச விமானங்களில் நீங்களே குடிப்பதற்கு மது கொடுக்கிறீர்கள், ஆனால், உள்நாட்டு விமானத்தில் நாங்களே மதுவைக் கொண்டு வந்து குடிப்பதற்கு அனுமதி கிடையாதா?' என்று அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அந்த பயணி குறித்து விமானியிடம் பணிப்பெண்கள் புகார் அளித்தனர். சென்னையில் விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை, விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மன்னிப்பு கேட்ட பயணி இசக்கியப்பனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.