ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம்

ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம்
Updated on
1 min read

சென்னை: ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக காவல் துறை டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறை டிஜிபிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞரை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை மீறுபவர்களின் ஜாமீனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தை பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக் கெடுவுக்குள் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறுவதே, குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழிவகை செய்கிறது. அதனை தடுத்திட, கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி புலன் விசாரணை நடத்தி உரிய காலக் கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், காவல் துறையினர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in