

குன்றத்தூர்: சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (54), முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார். இளநீர் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (50).மகன் சந்தோஷ் (20) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி சந்தோஷ் பூந்தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வுஎழுதுவதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார்.
தன்னை விட்டுவிட்டு சென்ற பெற்றோர் வீடு திரும்பவில்லை என குன்றத்தூர் போலீஸில் சந்தோஷ் புகார் அளித்தார். இந்தபுகாரின் பேரில் குன்றத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திடீரென சந்தோஷின் தாய் சேலத்துக்கு வருமாறு கூறிய நிலையில் சந்தோஷ் போலீஸாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.
குன்றத்தூர் போலீஸார் மாறுவேடத்தில் சந்தோஷ் உடன் சென்றனர். அப்போது சந்தோஷை அழைத்து செல்ல வந்த மூன்று நபர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் கணேசன், நித்தியானந்தம், விக்னேஷ் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வெங்கடேசனை அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: வெங்கடேசன் சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 கோடி வரை பெற்றுக்கொண்டு இதுவரை பணத்தைதிரும்ப தரவில்லை.
இதையடுத்து மகனை கல்லூரியில் நீட் தேர்வு எழுத விட்டு விட்டு இருவரும் சேலத்துக்கு கிளம்பி சென்று பணம் வாங்கியவர்களிடம் பேசி கொண்டிருந்தனர்.
தங்களுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் நிலையில் அதை விற்று விட்டு பணம் தருவதாக இருவரும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது இடத்தை அவர்களது பெயரில் பதிவு செய்து தர வேண்டும் என வாக்குவாதம் ஏற்பட்டு இருவரையும் ஊத்தங்கரைக்கு கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.
இதில் வெங்கடேசன் அங்கேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலைஅருகில் புதைத்து விட்டபிறகு, சந்தோஷ் பெயரிலும் சொத்துகள் இருப்பதால் தாய் மூலம் தகவல் தெரிவித்து மகனை வரவழைத்துள்ளனர். இதையடுத்து பிடிபட்ட 3 பேரும் வெங்கடேசன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டிய பின்பு அங்கேயே பிரேதபரிசோதனை செய்ய முடிவுசெய்துள்ளோம். இவ்வாறு போலீஸார் கூறினர். மேலும் வழக்கை ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.