

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த குஜராத்தைச் சேர்ந்த இரு தம்பதியை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று காலை 7.30-க்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
உள்ளாடைக்குள் மறைத்து... அப்போது இரு கைக்குழந்தை களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்த இரு தம்பதிகளை மடக்கி சோதனை நடத்தினர். அதில் அவர்கள் தலா ஒரு கிலோ வீதம் தங்களது உள்ளாடைகளில் சுமார் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களைக் கைது செய்த தனிப்படை அதிகாரிகள் தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்த னர்.
இவர்கள், சென்னையில் யாரிடம்கொடுப்பதற்காக தங்கக் கட்டிகளை கடத்தி வந்தனர் என்பது குறித்தும், இதற்கு முன்பாக இதுபோல தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளனரா என்பது குறித்தும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.