

சென்னை: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம்ஹாசன் தொகுதி மதசார்பற்றஜனதாதளம் எம்.பி.யுமானப்ரஜ்வல் ரேவண்ணா, 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக ப்ரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரஜ்வல் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தந்தையும் எம்எல்ஏ-வுமான ரேவண்ணாவை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப்ரஜ்வல் தனது பாலியல் வன்கொடுமைகளுக்கு முன்னாள் பிரதமரான தேவகவுடாவுக்கு ஒதுக்கப்பட்ட சொகுசு பங்களாவை பயன்படுத்தியிருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
ப்ரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அந்த விவரம் ரகசியம்காக்கப்படும் எனவும் அறிவித்துள்ள தனிப்படை போலீஸார், பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வீடியோக்களை பொதுவெளியில் அல்லது தனிப்பட்ட முறையில் பகிர்ந்தாலோ அல்லது தங்களது மொபைல் போனில் சேமித்து வைத்திருந்தாலோ சட்டப்படி குற்றம் என எச்சரித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களை பகிரங்கப்படுத்தும் வகையில் வீடியோக்களை பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ப்ரஜ்வல் தொடர்பான பெண்களின் ஆபாச வீடியோக்களை, ஆடியோக்களை, புகைப்படங்களை உடனடியாக அழித்து விட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பெண்களின் ஆபாச வீடியோக்களை முகம் தெரியாத மூன்றாவது நபர்கள் நமக்கு அனுப்பி வைத்தால் நம்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பொதுவாக பெண்களின் ஆபாச வீடியோக்களை பொது வெளியில் பகிர்வது, பார்ப்பது, சேமிப்பது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறுகிறார் உயர் நீதிமன்ற முன்னாள் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.முகமது முஸம்மில்.
அவர் மேலும் கூறியதாவது: ஆபாச படங்களை பகிர்ந்தவர், பார்த்தவர் மற்றும் சேமித்து வைத்தவருக்கு அதற்கான குற்ற மனம், உள்நோக்கம், காரண காரியம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதேபோல வாட்ஸ்ஆப் குழுவில் பொதுவாக அனுப்பி வைக்கப்படும் ஆபாச படங்களுக்கு தனிப்பட்ட ஒருவரை குற்றவாளியாக்க முடியாது.
ஆனால் தனிப்பட்ட நபருக்கு மற்றொருவர் ஆபாச படங்களை அனுப்பி வைத்தால் அதில் குற்றத்துக்கான கூட்டுச்சதி இருக்கிறதா என்பதை விசாரணை அதிகாரி தான் ஆராய வேண்டும். அதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் சம்பந்தப்பட்ட நபருக்கே உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் ரீதியிலான ஆபாச படங்களை மின்னணு வடிவில் பார்த்தாலோ, பொது வெளியில் பகிர்ந்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 66 இ, 67, 67 ஏ, 67 பி பிரகாரம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத்.
மேலும் அவர் கூறியதாவது: முகம் தெரியாத மூன்றாவது நபர்கள் அனுப்பி வைக்கும் ஆபாச படங்கள், வீடியோக்கள் நமது மொபைல் போன்களில் தெரியாமல் சேகரமாவது குற்றமாகாது. ஆனால் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் தெரியாமல் அனுப்பி வைக்கப்பட்டாலும் குற்றமே.
அதேநேரம், பழிவாங்கும் உள்நோக்கத்துடன் ஒருவர் பிறருக்கு பெண்கள் தொடர்பான ஆபாச படங்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டே இருந்தால் சம்பந்தப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் போலீஸில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் அளிக்கலாம். இல்லையெனில் அதற்கு சம்மதம்தெரிவித்து ஆமோதித்த குற்றத்துக்காக அவரும் சிக்கலில் மாட்ட நேரிடும். இவ்வாறு கூறினார்.