Published : 09 May 2024 06:00 AM
Last Updated : 09 May 2024 06:00 AM

கொலை திட்டத்துடன் பாரிமுனை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது

கைது செய்யப்பட்ட யஸ்வந்த்ராயன், ஜெய்பிரதாப், கார்த்திகேயன், பிரான்சிஸ், கார்த்திக், கோகுல்நாத்.

சென்னை: முன் விரோதத்தில் ஒருவரை கொலை செய்ய, ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததாக திமுக பிரமுகர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பாரிமுனை, ராஜாஅண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக எஸ்பிளனேடு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனைமேற்கொண்டதில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அந்த 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பிடிபட்டவர்கள் சென்னை ஓட்டேரி மங்களபுரத்தைச் சேர்ந்த யஸ்வந்த்ராயன் (25), நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஜெய்பிரதாப் (18), அயனாவரம் கார்த்திகேயன் (20), பெரம்பூர் பிரான்சிஸ் (25), அதேபகுதி கார்த்திக் (25), மங்களாபுரம் கோகுல்நாத் (20) என்பது தெரியவந்தது. பிடிபட்ட 6 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 4 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் யஸ்வந்த்ராயன் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல பிரான்சிஸ் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. யஸ்வந்த்ராயன், பிரான்சிஸ் ஆகியோருக்கும் சென்னைஅயனாவரத்தைச் சேர்ந்த சரண்என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் யஸ்வந்த்ராயனை, சரண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதில் படுகாயத்துடன் யஷ்வந்த் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பாக அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரண் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு ஜாமீனில் வெளியே வந்தசரணை கொலை செய்ய யஸ்வந்த்ராயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கு‌ விசாரணைக்காக சரண் நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வருவதை அறிந்து கொண்ட யஷ்வந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரணை கொலை செய்யப் பதுங்கி இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விழிப்புடன் செயல்பட்டதால் கொலை முயற்சியைத் தடுத்து, அதில் தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட யஸ்வந்த்ராயன் ஓட்டேரிபகுதி திமுக பிரமுகராக உள்ளார்என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x