

கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மனோகர் (55). இவருடைய மனைவி ரேணுகா (40). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 5-ம் தேதி மனோகர், தனது மகள்களுடன் காந்தி புரத்தில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்றார். பின்னர், மாலை வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வீட்டில் தனியாக இருந்த மனைவி ரேணுகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் நகை மாயமாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரிய நாயக்கன் பாளையம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், ரேணுகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் (35) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
மேலும், ரேணுகாவின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரின் அடையாளங்களும், சதீஷின் அடையாளங்களும் ஒத்துப் போனது. இதைத்தொடர்ந்து போலீஸார் அவரைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அதில், ரேணுகாவை அரிவாளால் வெட்டிக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து சதீஷை போலீஸார் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்னர் சதீஷ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கி ஒரு கார் வாங்கியுள்ளார்.
கடந்த இரு மாதங்களாக தவணைத் தொகையை செலுத்தவில்லை. ரேணுகா வீட்டில்தனியாக இருப்பதை அறிந்த சதீஷ்,வீட்டுக்குள் நுழைந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்று நகையை பறித்துச் சென்றது தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடைய நபரை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி பாராட்டு தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட ரேணுகாவின் 2-வது மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் அவர் 533 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ரேணுகா கொல்லப்பட்ட சூழலில், மகளின் தேர்ச்சியை கொண்டாட முடியாமல் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.