Published : 07 May 2024 04:02 AM
Last Updated : 07 May 2024 04:02 AM

ஆவடியில் போதை இளைஞர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி வைரல்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும், ஆவடியில் தலைமை காவலரை போதை இளைஞர் லோகேஷ் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சி.

ஆவடி: ஆவடியில் போதை இளைஞர் ஒருவர் கற்களை வீசி காவலரை தாக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் லோகேஷ் ( 19 ). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கடந்த 4-ம் தேதி ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சலூன் கடை அருகே கால்சட்டை மட்டும் அணிந்த நிலையில் போதையில், சாலையில் சென்ற பொதுமக்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100-ல் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த ஆவடி தலைமை காவலர் சரவணன், போதையில் பொதுமக்களிடம் வீண் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கட்டுப்படுத்த முயன்றார். இதனால் கோபமடைந்த லோகேஷ், தலைமை காவலர் சரவணன் மீது சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீசி தாக்கினார். ஆகவே அதிர்ச்சியடைந்த சரவணன், அருகில் கிடந்த கட்டையால் லோகேஷை தாக்கி பிடிக்க முயன்றார். இதற்குள் லோகேஷின் தாய் சம்பவ இடம் விரைந்து, சரவணனை தடுத்தார்.

தொடர்ந்து, லோகேஷை மடக்கிப் பிடித்த சரவணன் அவரை ஆவடி காவல் நிலையம் அழைத்து சென்றார். போதை தெளிந்ததும் லோகேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், லோகேஷ் அதிக அளவு மது அருந்தியதால் போதையில் பொதுமக்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பிறகு, லோகேஷின் பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸார், லோகேஷ் மற்றும் அவரது பெற்றோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போதை இளைஞர் லோகேஷ், தலைமை காவலரை கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x