

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது தந்தை கே.பி.கருத்தையா, ராதாபுரம் ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். இவரது வீட்டில் காமராஜர் தங்கியிருந்துள்ளார். கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்தஜெயக்குமார் பெரிய அளவில் கான்ட்ராக்ட் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், எப்போதும் மிருதுவாகவே பழகுவார் என்று கட்சி நிர்வாகிகள் புகழ்கின்றனர்.
ஆனால், சமீபகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார். நெல்லை எஸ்.பி.க்கு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரிடம் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டாரத்தில் ரூபிமனோகரனை எதிர்த்து ஜெயக்குமார் அரசியல் செய்துள்ளார். 2022-ல் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளை ஜெயக்குமார் நியமனம்செய்ததில் அதிருப்தி அடைந்த ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், சத்தியமூர்த்தி பவனில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அப்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து, ரூபி மனோகரன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அண்மையில் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின்போதும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ரூபி மனோகரன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், உள்ளூர் வேட்பாளரையே நிறுத்த வேண்டுமென ஜெயக்குமார் வலியுறுத்தினார். தொடர்ந்து, ராபர்ட்புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் முழுஅளவில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் மர்ம மரணம் கட்சி நிர்வாகிகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியதாக வெளியான 5 பக்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், சமீபகாலமாக தனக்குகொலை மிரட்டல் வருவதாகவும், வீட்டருகே இரவு நேரத்தில் சந்தேகப்படும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஏதாவது நேர்ந்தால், சிலரது சதியாக இருக்கும் என்று தெரிவித்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களை, செல்போன் எண்களுடன் பட்டியலிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பணம்கொடுக்கல்-வாங்கல் விவகாரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ரூபி மனோகரன் எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளது, அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இவற்றை ரூபி மனோகரன் மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல் துறை மெத்தனப்போக்கை கடைப்பிடித்ததாக அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த கடிதம் தன்னிடம் அளிக்கப்படவும் இல்லை, அனுப்பப்படவும் இல்லை என்று எஸ்.பி.திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மேலும், இது தொடர்பாகவிசாரிக்க 7 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தெல்லாம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்து 350 அடி தொலைவில், தோட்டத்துக்குள் பாதி எரிந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கால்களும், கைகளும் மின் வயர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில்சடலம் கிடந்துள்ளது. இதனால்போலீஸாரின் சந்தேகங்கள் வலுத்துள்ளன. விசாரணை வளையத்துக்குள் அவரது குடும்பத்தினரும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் 2-வது கடிதம் நேற்று வெளியானது. அதிலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரமே பிரதானமாக உள்ளது. தன்னிடம் பணம் பெற்றவர்களிடம் இருந்து சட்டரீதியாக பணத்தை பெற வேண்டும் என்றும், தான் குறிப்பிட்டவர்களை பழிவாங்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே விசாரணை சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவழக்கறிஞர் பிரம்மா கூறும்போது,"தனக்கு மிரட்டல் இருப்பதை காவல் துறையிடமோ, கட்சி மேலிடத் தலைவர்கள் அல்லது எங்களைப் போன்ற வழக்கறிஞர்களிடமோ முன்கூட்டியே ஜெயக்குமார் தெரிவித்திருக்கலாம்.
இந்த விவகாரத்தில், யூகங்களின் அடிப்படையில் எந்தமுடிவுக்கும் வரமுடியாது. காவல் துறை நியாயமாக, சுதந்திரமாக விசாரிக்க அனுமதிக்கப்பட வேண்டும். எவ்வித அரசியல் அழுத்தங்களும் இதில் இருக்க கூடாது. வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கலாம்" என்றார்.
பணம் கொடுத்தவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றியதும், மக்களவைத் தேர்தலில் நெல்லையில்தனக்கோ, தனது ஆதரவாளர்களுக்கோ வாய்ப்பு கிடைக்காததும் அவருக்கு ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியதாக ஜெயக்குமார் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜெயக்குமார் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது அடுத்தடுத்த நாட்களில் போலீஸார் விசார ணையில் தெரியவரும்.