

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோரிடம் இருந்து ரூ.89 லட்சம் வசூலிக்க வேண்டும் என்று, ஜெயக்குமார் தனது மருமகனுக்கு எழுதியதாக மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எஸ்.பி.க்கு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், அவர் தனது மருமகன் ஜெபா மற்றும் குடும்பத்தினருக்கு எழுதியதாக 4 பக்க மற்றொரு கடிதம் நேற்று வெளியானது.
அந்தக் கடிதத்தில், நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் ரூ.78 லட்சம், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு ரூ.11 லட்சம் தர வேண்டும் என்றும், மொத்தம் ரூ. 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் பிறரிடத்தில் பணம் வாங்கியுள்ளது தொடர்பாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் யாரும் தான் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு பழிவாங்க வேண்டாம் எனவும், சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப்பின் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான கரைச்சுத்துபுதூரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி: சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி.க்கள் விஜய்வசந்த், மாணிக்கம்தாகூர், ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், பிரின்ஸ், ராஜேஸ், நெல்லை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், குடும்ப கல்லறை தோட்டத்தில் ஜெயக்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வெளிப்படையான விசாரணை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று(நேற்று) மாலைக்குள் நல்ல தகவல் வெளிவரும் என்று எஸ்.பி. என்னிடம் தெரிவித்தார். வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான், உயிரிழப்புக்கு யார் காரணம் என்பது வெளியேவரும். நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து, மேலிடத்துக்கு அறிக்கை அனுப்புவோம்” என்றார். ரூபி மனோகரன் எம்எல்ஏமீது விசாரணை நடத்தப்படுமா என்று கேட்டதற்கு, “அவர் மீதும்விசாரணை நடத்தலாம் என்றுஏற்கெனவே தெரிவித்துவிட் டோம்”என்றார்.
அறிவியல் பூர்வ நடவடிக்கை
மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மரண வாக்கு மூலம் என்ற பெயரில் எஸ்.பி.யிடம் ஜெயக்குமார் புகார்மனு அளித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது.
ஜெயக்குமார் மகனான கருத்தையா ஜெப்ரின் கடந்த 3-ம் தேதி உவரி காவல் நிலையத்தில், தனது தந்தையைக் காணவில்லை என புகார் அளித்தார். அப்போது, தனது தந்தையின் அறையில் இருந்ததாகக் குறிப்பிட்டு ஒருகடிதத்தை அளித்தார். அதில்30.04.2024 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். வழக்கை துரிதப்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.