

சென்னை: மெரினாவில் ரஷ்யா நாட்டு சுற்றுலா பயணியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் ஏல்க்ஹான் ( 38 ). இவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வந்த அவர் டெல்லி, கோவா சென்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், இவர் மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நின்று மெரினாவை ரசித்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், ஏல்க்ஹானை தாக்கி அவரது செல்போனை பறித்து தப்பியது.
காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்ற பின்னர் இது குறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், சம்பவம் நடந்தது மெரினா கடற்கரை என்பதால் இது குறித்து மெரினா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல்கட்டமாக மெரினா பகுதிகளை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷ்யா சுற்றுலா பயணியை தாக்கி மெரினாவில் செல்போன் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.