

சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி ( 61 ). வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த இவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வழிப் பறி கொள்ளையன் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்து தப்பினார். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கப்பட்டது.
இதில், மூதாட்டி பத்மாவதியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது மகாராட்டிரா மாநிலம் பர்பானி, யஸ்வந்த் நகரைச் சேர்ந்த அமோல் ( 32 ) என்பது தெரியவந்து அவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அமோல் தனது சொந்த மாநிலாமான மகாராஷ்டிராவிலிருந்து சென்னைக்கு வந்து விடுதிகளில் தங்கியிருந்து, இருசக்கர வாகனங்களை திருடிய பின்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இவர் ஏற்கெனவே சென்னையில் 2019-ம் ஆண்டு அண்ணாநகர், 2020-ம் ஆண்டு திருமங்கலம், 2021-ல் கோட்டூர்புரம், சைதாப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 10 செயின் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் மீது கேரளா, கர்நாடகா-பெங்களூரு, தெலங்கானா- ஹைதரபாத், மகாராஷ்டிரா – மும்பை ஆகிய மாநிலங்களிலும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன.
வேறு வழக்குகளில் 3 பேர்: இதேபோல், பிரபல கொள்ளையர்களான வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சூர்யா ( 26 ), பெரம்பூரைச் சேர்ந்த சத்யா ( 24 ), சூளைமேடு ராம்குமார் ( 28 ) ஆகிய மேலும் 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது 34 வழக்குகளும், சத்யா மீது 12 வழக்குகளும் உள்ளன.