

தென்காசி: தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை, திருநகரில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கிளாங்காடு ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார்.
கடந்த 2-ம் தேதி இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்க முயன்றதாகவும், அப்போது கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றபோது தன்னை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் தென்காசி காவல் நிலையத்தில் சந்திரசேகரன் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டுக்குள் புகுந்த கும்பல் தங்களிடம் இருந்த பையை அங்கேயே பதற்றத்தில் தவற விட்டுச் சென்றதும், சந்திரசேகரனின் செல்போனை அவர்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில் அவர்கள் கோவை நோக்கி சென்று கொண்டிருப்பது கண்டறியப் பட்டது. மேலும், சந்திரசேகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்து மக்கள் கட்சி தென்காசி மாவட்ட தலைவர் கண்ணன், சக்திமாரி ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சந்திரசேகரன் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாகக் கூறி, அவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதும், அப்போது பிரச்சினை ஏற்பட்டதால் அவர்கள் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணன் ( 40 ), தென்காசி பகுதியைச் சேர்ந்த சக்திமாரி ( 47 ), ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ( 22 ), தேனி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் ( 22 ), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன்குமார் ( 20 ), கோவை பகுதியை சேர்ந்த போத்திராஜ் ( 30 ), அருள் ஆகாஷ் ( 34 ) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.