

கோவை/தேனி: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா சிஇஓ சங்கர் கைது செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ)சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்கள் வந்தன.
கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 294-பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 509 (பெண்களை அவதூறாகப் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம்பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை,உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை அங்கிருந்து வேன் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
வேன் மீது கார் மோதி விபத்து: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி. கார்னர் பகுதி அருகே நேற்று காலை போலீஸ் வேன் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வேன் மீது மோதியது. இதில், சவுக்கு சங்கர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் வேறொரு வேன் மூலம் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வந்தனர்.
கோவையில் ரகசிய இடத்தில் சவுக்கு சங்கரிடம் போலீஸார் சில மணி நேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக, தேனியில் சவுக்கு சங்கருடன் இருந்த அவரது ஓட்டுநர் ராம்பிரபு, நண்பர் ராஜரத்தினம் ஆகியோரை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கஞ்சா வழக்கும் பாய்ந்தது... தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்தபோது, அவருடன் இருந்த இருவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.