

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின.
இந்நிலையில் 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் ஹாசன் போலீஸார், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே கர்நாடக மகளிர் ஆணைய தலைவிக்கு 300 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கிடைத்தது. அவரது வேண்டுகோளின்படி முதல்வர் சித்தராமையா, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இக்குழுவின் முன்பு ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு ரேவண்ணாவும், பிரஜ்வலும் கோரினர்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக செய்தி வெளியானது. எனவே, போலீஸார் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஹாசனை சேர்ந்த 44 வயதான முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ''3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த மாணவிகள் 2 பேரை கல்லூரியில் சேர்க்க உதவுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டி என்னை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார்'' என்று தெரிவித்தார். இதையடுத்து ஹாசன் போலீஸார் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்த 25 வயது பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தையும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீஸார் ரேவண்ணா மீதும், மஜத நிர்வாகி சதீஷ் பாவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ரேவண்ணாவும், மஜத நிர்வாகி சதீஷ் பாவண்ணாவும் என்னை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டினர். பிரஜ்வல் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சதீஷ் பாவண்ணா என்னை அவரது காரில் மைசூருவுக்கு கடத்திச் சென்றார்'' என கூறியுள்ளார்.
ரேவண்ணா கைது? - பாதிக்கப்பட்ட பெண்களை ரேவண்ணா மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளதால் சிறப்பு புலனாய்வு போலீஸார் அவரை கைது செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரேவண்ணா நேற்று ஹாசன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.