Published : 04 May 2024 07:15 AM
Last Updated : 04 May 2024 07:15 AM

மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது - திருப்பூர் போலீஸ் நடவடிக்கை

திருப்பூர்: மாட்டு் சாணத்தை கஞ்சா என நூதனமாக விற்று மோசடியில் ஈடுபட்ட நபர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் அருகே இளைஞர்கள் 2 பேரை, சந்தேகத்தின் பேரின் பிடித்து திருப்பூர் மத்திய போலீஸார் விசாரித்தனர்.

அவர்களிடமிருந்து இளைஞர்கள் தப்பிக்க முயன்றதால், மேலும் சந்தேகமடைந்து போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதித்தபோது, கஞ்சா இருப்பது தெரியவந்தது.

திருப்பூர் கே.வி.ஆர். நகரில் ஒரு கிலோ கஞ்சா ரூ.33 ஆயிரம் கொடுத்து வாங்கி சென்றதாகவும் தெரிவித்தனர். ஆனால், அதில் மாட்டு சாணம், வைக்கோலை கலந்துகொடுத்து கஞ்சா என விற்று மோசடி செய்தது தெரியவந்தது. தகவலின்பேரில், கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரை பிடித்தனர்.

மாட்டு சாணத்தை கஞ்சா பொட்டலம் என விற்று ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து, இருவரும் பதுக்கிவைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய 4 பேரை, திருப்பூர் மத்திய போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x