

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே நண்பரை எரித்து கொலை செய்த வழக்கு விசாரணையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் டிஎன்ஏ பரிசோதனையில் பெண் உடல் என கூறப்பட்டுள்ளதால் ஒரத்தி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடிசை வீடு எரிந்ததில், அதில் தங்கியிருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக, ஒரத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் டில்லிபாபு என்ற நபர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், சம்பவம் தொடர்புடையவர்களாக சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (38), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(32), தாம்பரத்தை அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சுரேஷ், குடிசை வீட்டில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்த டில்லி பாபுவும் நண்பர்கள். இதில், சுரேஷ், சென்னையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் காப்பீடு செய்துள்ளார்.
இந்த காப்பீட்டுத் தொகையை, தான் உயிருடன் இருக்கும் போதே பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சுரேஷ் தன் வயதுடைய நபரை பல மாதங்களாக தேடி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது நீண்ட நாள் நண்பரான டில்லிபாபுவைத் தேடிச் சென்று அவரை தனது கூட்டாளிகளுடன் அழைத்து கொண்டு, அச்சிறுபாக்கத்தை அடுத்த அல்லாணூர் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் செப். 15-ம் தேதி கொலை செய்து, குடிசையை எரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில், இன்சூரன்ஸ் தொகையான ரூ.1 கோடி பெற்ற பிறகு, நண்பர்களான கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு சுரேஷ் மட்டும் ரூ.60 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டதாகவும், அதற்காக ஒரே வயதுடைய நபரான டில்லி பாபுவை கொலை செய்து குடிசை வீட்டில் வைத்து எரித்திருப்பதாகவும் தெரியவந்தது. மேற்கண்ட மூன்று நபர்களையும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக சுரேஷ் வேறு ஒரு நபரை அணுகி, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால், பணம் பெற முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதில், உடல், பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டுள்ளதால் போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்க உள்ளனர்.