ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம்: தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறிவிழுந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவரை குடும்பத்தினர் நேற்று சொந்த ஊர் அழைத்துச் சென்றனர். அனைவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

விரைவு ரயிலானது கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அபாயச் சங்கிலியை இழுக்க முயன்றபோது அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின் டிக்கெட் பரிசோதகர் உதவியுடம் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதாகவும் அதற்குள் ரயில் பல கிலோமீட்டர் தூரம் கடந்துவிட்டது என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தவறி விழுந்த கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி
உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரி

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், S8. S9 ஆகிய இரண்டு பெட்டிகளில் அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லை என்று உறவினர்கள் கூறியுள்ள நிலையில் ரயில் கொல்லம் சென்றடைந்ததும் ரயிலில் குறிப்பிட்ட பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலி வேலை செய்கிறதா என்பது பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஓ விசாரணைக்குப் பரிந்துரை: இதற்கிடையில் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகியுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரைத்து விருத்தாச்சலம் கோட்டாட்சியருக்கு ரயில்வே காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in