சென்னை | உணவு டெலிவரி செய்வதுபோல் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பட்டதாரி இளைஞர் கைது

சென்னை | உணவு டெலிவரி செய்வதுபோல் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பட்டதாரி இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: உணவு டெலிவரி செய்வதுபோல் நகைப் பறிப்பில் ஈடுபடமுயன்றதாக பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நேபாள நாட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவரது மனைவி நிர்மலாதேவி (34).இருவரும் அண்ணா நகர்,14-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கடந்த 6 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிக்கும் நபருக்கு உணவு டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் வந்தார். அந்த இளைஞர் நிர்மலாதேவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக தெரிகிறது.

அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் நிர்மாலாதேவியின் கையில் இருந்த தங்க வளையல் மற்றும் செல்போனை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட நிர்மலா, இளைஞரை தட்டிவிட்டு வெளியில் ஓடிவந்து சத்தமிட்டபோது, அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடம் விரைந்து கண்காணிப்புகேமராவை ஆய்வு செய்து,நகைப் பறிப்பில் ஈடுபட முயன்றது சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது அலிகான் (22) என்பது தெரிந்தது.

இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பட்டப்படிப்பை முடித்த முகமது அலிகான், வேலை கிடைக்காததால், உணவு டெலிவரி வேலை செய்துவந்தது தெரிந்தது. குடும்ப வறுமை காரணமாக நகை பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in