Published : 02 May 2024 04:04 AM
Last Updated : 02 May 2024 04:04 AM

ஃபேஸ்புக்கில் பழகி சேலம் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம், நகை பறிப்பு: பெண் உட்பட 5 பேர் கைது

சேலம் தொழிலதிபரை கடத்தி நகை மற்றும் பணம் பறித்த பெண் உட்பட 5 பேரை கைது செய்த போலீஸாரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மூர்த்தி பாராட்டினார்.

திருநெல்வேலி: முகநூல் மூலம் பழகி சேலம் தொழிலதிபரை திருநெல்வேலிக்கு வரவழைத்து, ரூ. 10 லட்சம் பணம் மற்றும் நகைகளைப் பறித்த பெண் மற்றும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் ( 47 ). காற்றாலைகளுக்கு உதிரிப்பாகங்கள் விநியோகிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்ட நித்தியானந்தத்தின் நண்பர் ஒருவர், திருநெல்வேலியைச் சேர்ந்த கும்பல் நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருப்பதாக புகார் செய்தார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஆதர்ஷ் பசேரா, உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான போலீஸார், நித்தியானந்தத்தின் செல்போன் எண் மூலமாக அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். திருநெல்வேலி அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண் உட்பட 5 பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நித்தியானந்தத்தை போலீஸார் மீட்டனர்.

திருநெல்வேலி பெருமாள்புரம் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பானுமதி ( 40 ) என்ற பெண், முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகியுள்ளார். பின்னர் ஆசை வார்த்தை கூறி திருநெல்வேலிக்கு வரும்படி அழைத்துள்ளார். பானுமதியின் பேச்சை நம்பி திருநெல்வேலி வந்த நித்தியானந்தம், பெருமாள்புரம் பகுதியில் உள்ள விடுதியில் அவரைச் சந்தித்துள்ளார்.

அப்போது, பானுமதியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை ( 42 ), பார்த்த சாரதி ( 46 ), ரஞ்சித் ( 42 ), சுடலை ( 40 ) ஆகியோர் அந்த அறைக்குள் புகுந்தனர். கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.60 ஆயிரம், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

தொடர்ந்து காசோலை மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றுக்கு நித்தியானந்தத்தை அழைத்துச் சென்றுள்ளனர். பணம் தரவில்லை என்றால் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் அளிப்பேன் என, பானுமதி மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அவர்கள் கேட்டபடி வங்கியில் இருந்து ரூ. 10 லட்சத்தை நித்தியானந்தம் எடுத்துக் கொடுத்துள்ளார்.

வங்கிக்குச் செல்லும் போது தான் நித்தியானந்தம் தனக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து தனது நண்பரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவரது நண்பர் புகார் அளித்த 30 நிமிடத்தில், பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்து, நித்தியானந்தத்தை போலீஸார் மீட்டனர். பானுமதி இது போன்று முகநூல் மூலம் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் பறித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரைந்து செயல்பட்டு தொழிலதிபரை மீட்ட போலீஸாரை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x