

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடிஅருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர், தன் வீட்டின் கீழ் தளத்தில் நடத்தி வரும் நகை மற்றும் அடகு கடையில் கடந்த 15-ம் தேதி பகலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.
அக்கும்பல், கடையின் இரும்பு கதவை மூடி, இரு துப்பாக்கிகளின் முனையில் இந்தி மொழியில் பேசி பிரகாஷை மிரட்டியது. தொடர்ந்து, அக்கும்பல், பிரகாஷின் வாயை டேப்பால் ஒட்டிவிட்டு, கைகளை கயிற்றால் கட்டி விட்டு, கடையின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.1.50 கோடி மதிப்பிலான புதிய தங்க நகைகள், அடகு வைக்கப்பட்ட தங்கநகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம்ஆகியவற்றை கொள்ளையடித்தது.
பிறகு, மர்ம கும்பல், கடையின்கதவை பூட்டி விட்டு, அப்பகுதியில் தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரில் நகைகள் மற்றும்பணத்துடன் தப்பி சென்றது. இச்சம்பவம் குறித்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 8 தனிப்படை போலீஸார் கொள்ளையரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸார் தீவிர விசாரணை: இந்நிலையில், கொள்ளை நடந்த நகை கடை அருகே பதிவான மொபைல் போன் சிக்னல்கொண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார், சென்னை பெரியமேட்டில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26), ஷீட்டான் ராம்(25) ஆகியோரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அவ்விசாரணையில், கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி வந்த தினேஷ்குமாரும், ஷீட்டான் ராமும், கொள்ளையருக்கு தங்க இடம் அளித்து, மோட்டார் சைக்கிள்களில் கடையை நோட்டமிட்டு, கொள்ளையில் ஈடுபட உதவியது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸார், தினேஷ்குமார், ஷீட்டான் ராம் ஆகியோரை கைது செய்து, நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து இரு மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.