Published : 30 Apr 2024 06:52 AM
Last Updated : 30 Apr 2024 06:52 AM
திண்டுக்கல்: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட் நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் கீழ், எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற விஜய்கிருஷ்ணனும், துணைத் தலைவராக திருச்சி மல்லியம்பத்துவைச் சேர்ந்த சாந்தினி பிரபாவும் இருந்தனர். பண மோசடி புகாரை தொடர்ந்து, இருவரும் தலைமறைவாகினர்.
இதுகுறித்து திண்டுக்கல் பொரு ளாதாரக் குற்றப்பிரிவு போலீ ஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை கே.கே.நகரை தலைமையிடமாகக் கொண்ட எஸ்.எம்.சி. நிறுவனமானது, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங் களில் பல்வேறு கிளைகளை தொடங்கியது.
இதில் தினசரி சேமிப்பு, வாராந்திர சேமிப்பு, மாதாந்திர சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தால், 3 முதல் 12 சதவீதம் வரை அதிக வட்டியுடன் முதிர்வு தொகை தருவதாக விளம்பரப்படுத்தினர்.
இதன்மூலம் ஆயிரக்கணக் கானவர்களிடமிருந்து பல கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றனர். ஆனால், முதிர்வு காலம் முடிந்த பின்பும் முதலீட்டாளர்களுக்கு தொகையை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். பின்னர், தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான திண்டுக்கல் அருகே சின்ன பள்ளபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர், அந்நிறுவனத்தின் தலைவர், துணைத் தலைவர் மீது திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித் தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த நிறுவனத் தலைவர் விஜய்கிருஷ்ணன் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், தலை மறைவாக உள்ள சாந்தினி பிரபா தேடப்பட்டு வருகிறார்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்ட 222 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இவ்வழக்கு தொடர்பாக எஸ்.எம்.சி. நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் என 43 இடங்களில் சோதனை நடத்தப் பட்டு, ஆவணங்கள் மற்றும் சொத்துகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தேனி, விருதுநகர், தென் காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்ட எஸ்.எம்.சி. கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அசல் ஆவணங்களுடன், திண்டுக்கல்லில் எண் 59, நேருஜி நகர் பூங்கா எதிரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கலாம், என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT