

நாமக்கல்: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான 13, 12 வயது சிறுமிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா, ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சங்கர் (26), சண்முகம் (45), ஊமையன் (எ) முத்துசாமி (75), மணிகண்டன் (30), சூர்யா (23), செந்தமிழ்ச்செல்வன் (31), வரதராஜ் (எ) சேலத்தான் (59) உள்பட 12 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிவா (எ) சங்கர், வரதராஜ் (எ) சேலத்தான் ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து திங்கங்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தனித்தனியாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருவர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மீதமுள்ள 10 பேர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இருவர் 18 வயதுக்கு குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.