

சென்னை: ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க நகைகளை பறித்த வழக்கில் தொடர்புடைய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகருக்கு விரைவு ரயில் கடந்த 21-ம் தேதி இரவு புறப்பட்டது. இந்த ரயிலில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூருக்கு செல்வதற்காக, எண்ணூரை சேர்ந்த லட்சுமி (56) பயணம் செய்தார்.
ரயில் புறப்பட்டு சென்றபோது, கழிவறைக்கு லட்சுமி சென்றார். பின்னர் திரும்பியபோது, கழிவறை அருகே நின்ற அடையாளம் தெரியாத நபர், லட்சுமி கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல், சென்னையில் இருந்து ஈரோடுக்கு புறப்பட்ட ஏற்காடு விரைவு ரயிலில் பயணித்த நேகா (24) என்பவரிடம் தாலி செயின் பறிக்கப்பட்டது. மற்றொரு நகை பறிப்பு சம்பவம், ஈரோடு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, ரயில்வே போலீசில் பெண் பயணிகள் புகார் கொடுத்தனர். இதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் புகார்தாரர்கள் கொடுத்த அடையாளத்தின் அடிப்படையில் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பேசின்பாலம் ரயில் நிலைய நடைமேடையில் பதுங்கி இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் விரைந்து சென்று, இருவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடை சேர்ந்த குமரேசன் (29), சென்னை வண்ணாரப்பேட்டை சதீஷ்(30) என்பதும், ஓடும் ரயில்களில் 3 பெண்களிடம் தங்க நகைகளை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைககளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.