Published : 28 Apr 2024 05:56 AM
Last Updated : 28 Apr 2024 05:56 AM
தென்காசி: விசாரணை என்ற பெயரில் போலீஸார் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதால், ஓய்வுபெற்ற அரசுப்பேருந்து நடத்துநர் இறந்துவிட்டதாக கூறி, அவரது சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (70). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இடப் பிரச்சினை தொடர்பாக இவரது பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின்பேரில், தங்கதுரை,அவரது மகளை பாவூர்சத்திரம் போலீஸார் கடந்த 24-ம் தேதி காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுடன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தங்கதுரையின் உறவினர்கள் மற்றும் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, முதியவர் தங்கதுரையை கடந்த24-ம் தேதி காலை முதல் இரவு 9 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே உடல்நிலைபாதிக்கப்பட்டிருந்த அவர், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவும் போலீஸார் அனுமதிக்கவில்லை.
போலீஸ் விசாரணையால் கடும்மன உளைச்சலுக்கு உள்ளாகியதாலும், மருந்து, மாத்திரைகளைஎடுத்துக் கொள்ளாததாலும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எனவே, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்தப் போராட்டம் நேற்று இரவு 7 மணி வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றச்சாட்டு குறித்து புகார்அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதிஅளித்தனர். அதன்பேரில் போலீஸார் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் தங்கதுரையின் உடலைபோலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT