

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல்(65). இவரது மகன் சக்திவேல் என்ற சந்தோஷ்(34), மகள் சங்கவி(30). இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
குழந்தைவேலுக்கு சொந்தமாக ஜவ்வரிசி தொழிற்சாலை, நவீன அரிசி ஆலை மற்றும் வீடு, நிலங்கள் உள்ளன. இதில், ஜவ்வரிசி தொழிற்சாலையை சந்தோஷ் கவனித்து வந்தார். அரிசி ஆலையை தனது பெயருக்கு எழுதித் தருமாறு தந்தையிடம் சந்தோஷ் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப். 16-ம் தேதி கிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் தனது தந்தை குழந்தைவேலை சந்தோஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 4 நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் கை.களத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குழந்தைவேல் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்.18-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் குழந்தைவேல் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குழந்தைவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், சந்தோஷ் தந்தை குழந்தைவேலைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் கடந்தசில தினங்களாக சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து, கடுமையாகத் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கை.களத்தூர் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய கை.களத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.