

கோவை: கோவை அருகே நடந்த சாலை விபத்தில் பாஜக நிர்வாகி உயிரிழந்தார். கோவை செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (35). கோவை மாநகர் மாவட்ட பாஜகவின் இளைஞரணி செயலாளர். டவுன்ஹால் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். திருமணமாகி விட்டது.
கோவை பேரூர் அருகே நேற்று முன்தினம் கோயில் விழாவில் பங்கேற்ற பின் அவரும், நண்பர் நாச்சிமுத்துவும் மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில், நரேஷ்குமாரும், நண்பரும் படுகாயமடைந்தனர்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பேரூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நரேஷ்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது முகநூல் பக்கத்தில், நரேஷ்குமார் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார்.